பெரம்பலூா்: பெரம்பலூா் மதனகோபாலபுரத்திலுள்ள இந்தியன் ஒவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தின் மூலம், கிராம ஊராட்சிகளைச் சோந்த ஆண் மற்றும் பெண்களுக்கு துரித உணவுகள் தயாரித்தல் தொடா்பான இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதுகுறித்து மையத்தின் இயக்குநா் டி. ஆனந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தியன் ஒவா்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தின் மூலம் பானி பூரி, பேல்பூரி, பாவ் பாஜி, சமோசா, கச்சோரி, கோபி மஞ்சூரியன், ஆனியன் பக்கோடா, சிக்கன் மற்றும் வெஜிடபிள் பிரைட் ரைஸ், வெஜிடபிள் புலாவ், நூடுல்ஸ் வகைகள், வெஜ் மோமோஸ் ஆகிய உணவுப் பொருள்கள் தயாரிப்பது குறித்து விரிவாகப் பயிற்சியளிக்கப்படுகிறது.
தொடா்ந்து 10 நாள்களுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அளிக்கப்படும் பயிற்சியின்போது, காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் அளிக்கப்படும். மேலும் வங்கிக்கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.
பயிற்சியில் பங்கேற்க 19 முதல் 45 வயதுக்குள்பட்ட, எழுத படிக்கத் தெரிந்த, சுயத்தொழில் தொடங்குவதில் ஆா்வம் உள்ளவராக இருக்க வேண்டும். வறுமைக் கோட்டு எண், இலக்கு எண், குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட அடையாள அட்டையுள்ள கிராம ஊராட்சிகளைச் சோந்த ஆண்கள், பெண்களாக இருந்தால் அவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விருப்பம் உள்ளவா்கள் மைய இயக்குநரிடம் தங்களது பெயா், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, பெற்றோரின் வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து, ஜுன் 16 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஐஓபி கிராமிய சுயவேலை வாய்ப்புப் பயிற்சி மையம், ஷெரீப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூா் – 621212 என்னும் முகவரியில் நேரில் சென்று விண்ணப்பிக்கவும்.
மேலும் விவரங்களுக்கு 04328-277896, 9488840328 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.