ஆசிரியர் பணியில் சேர்வதற்கான, ‘டெட்’ தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஒன்றரை மாதங்கள் ஆகியும், தேர்வு தேதியை இன்னும் அறிவிக்காததால், தேர்வர்கள் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி, பட்டப் படிப்புடன் பி.எட்., – டி.எல்.எட்., உள்ளிட்ட படிப்பு முடித்தவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பட்டதாரிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர்களாக பணியாற்ற முடியும். மத்திய அரசின் சட்டப்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இரண்டு முறை டெட் தேர்வை மாநில அரசுகள் நடத்த வேண்டும். நடப்பு ஆண்டுக்கான டெட் தேர்வுக்கு, ஆன்லைன் வழியே விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம் என, மார்ச் 7ல் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. முதலில் மார்ச் 14 முதல் ஏப்., 13 வரை ஆன்லைன் வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பின், ஏப்., 18 முதல் ஏப்., 26 வரை விண்ணப்ப பதிவுக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டது.
தேர்வுக்கு மாநிலம் முழுதும் இருந்து, ஆறு லட்சம் பேர் விண்ணப்பித்துஉள்ளனர்.விண்ணப்ப பதிவு முடிந்து ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வு எப்போது நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் அறிவிக்கவில்லை. தேர்வை விரைந்து நடத்தினால் மட்டுமே, விண்ணப்பித்து காத்திருக்கும் பட்டதாரிகள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, நடப்பு கல்வி ஆண்டிலேயே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர முடியும் என, தெரிவித்துஉள்ளனர்.