சென்னை: அரசு பள்ளிகளில் செயல்படும் எல்.கே.ஜி. வகுப்புகளுக்கு அங்கன்வாடி ஆயாக்கள் என்ற அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர்கள் வாயிலாக பாடம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஊராட்சி ஒன்றியம் நகராட்சி மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி வளாகத்தில் இயங்கும் 2381 அங்கன்வாடி மையங்களில் நடப்பு கல்வி ஆண்டில் எல்.கே.ஜி. – யு.கே.ஜி. மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் வழியாக மாணவர் சேர்க்கை பணிகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
எல்.கே.ஜி.க்கு மூன்று வயது மற்றும் யு.கே.ஜி.க்கு நான்கு வயது நிரம்பிய குழந்தைகளை சேர்க்க வேண்டும். அந்த குழந்தைகளுக்கு சத்துணவு அளிக்க வேண்டும்.மேலும் அந்த குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணி இயக்குனரகம் வழங்கும் புத்தகங்களை பயன்படுத்தி அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர்கள் பாடம் நடத்த வேண்டும். அங்கன்வாடிகளுக்கு சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படும் வரை இந்த அடிப்படையில் கற்பிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை இருந்தால் அதைப் பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் அங்கன்வாடி மையங்களையே வகுப்பறையாக பயன்படுத்த வேண்டும். அங்கன்வாடி பணியாளர் இல்லாவிட்டால் மாவட்ட கலெக்டரிடம் கூறி பணியாளரை பெற்றுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here