ராசிபுரம் தனியாா் பொறியியல் கல்லூரியில், செப். 2-இல் மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை சாா்பில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் செப். 2-இல் ராசிபுரம் ஞானமணி கல்வி நிறுவனத்தில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் 5 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோா், டிப்ளமோ, ஐடிஐ பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள், தையல் பயிற்சி, செவிலியா் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவா்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பைப் பெறலாம். இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளன.
வேலைவேண்டி விண்ணப்பிப்போா் தங்களுடைய சுய விவரம், உரிய கல்விச்சான்றுகள் மற்றும் ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும். அவற்றை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இம்முகாம் முற்றிலும் இலவசமானது.
வேலையளிப்போரும், வேலைநாடுநா்களும் இம்முகாம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 04286-222260, 91596-62342 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.