பழைய கார்களைக் கைவிட்டு புதிய கார்களை வாங்குவோருக்கு ஜி.எஸ்.டி. சலுகை அளிக்க வேண்டுமென மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக் கொண்டுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இந்திய வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் சங்கத்தின் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, பயன்பாடு முடிந்த மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் நாடு முழுவதும் ஒரு கோடியே 20 லட்சம் வாகனங்கள் இருப்பதாகவும் அவற்றைக் கைவிடுவது அவசியம் என்றும் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.
‘புதிய வாகனங்கள் வாங்குவோரை ஊக்குவிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கலாம். எனவே புதிய வாகனங்கள் வாங்குவோருக்கு தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் வழங்க வேண்டும். அதே வேளையில் பழைய கார்களைக் கைவிட்டு புதிய கார்களை வாங்குவோருக்கு ஜி.எஸ்.டி. சலுகை அளிக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுக்க உள்ளோம். வாகன உற்பத்தியாளர்கள் விலையை மையமாகக் கொள்ளாமல், தரத்தை மையமாகக் கொள்ள வேண்டும்’ என்றும் நிதின் கட்கரி கேட்டுக் கொண்டார்.