ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்துகொள்ளும் வசதி உள்ளது என்பதும் ஏராளமானவர்கள் பயணத்தை திட்டமிட்டு முன்பதிவு செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் திடீரென தங்கள் பயண திட்டத்தை மாற்றுவது அல்லது ரத்து செய்வதாக இருந்தால் ரயிலில் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யும் வசதியும் உள்ளது.
இந்த நிலையில் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை பயன்படுத்தாத நிலை ஏற்பட்டால், அதனை கேன்சல் செய்யாமல் அதை வேறொருவருக்கு மாற்று வசதியை ஐஆர்சிடிசி செய்து கொடுத்துள்ளது. அந்த வசதி குறித்து தற்போது பார்ப்போம்.
முன்பதிவு செய்த ரயில் டிக்கெட் ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை பெற்றிருந்தாலும் உங்களால் பயணிக்க முடியாத நிலையை நீங்கள் எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா? அப்படியானால், உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றுவதால், இப்போது உங்களுக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது. இது சம்பந்தமாக, இந்திய ரயில்வே ஒரு பயணியின் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை மற்றொரு நபருக்கு மாற்றுவதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
ரயில்வேயின் புதிய விதிகளின்படி, ஒரு பயணி தனது உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை தந்தை, தாய், சகோதரன், சகோதரி, மகன், மகள், கணவன் அல்லது மனைவி போன்ற அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் மாற்ற முடியும். இதற்காக, ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் பயணிகள் கோரிக்கை விடுக்க வேண்டும். இதற்குப் பிறகு, பயணச்சீட்டில் பயணிகளின் பெயர் நீக்கப்பட்டு யாருடைய பெயரில் டிக்கெட் மாற்றப்பட்டுள்ளதோ அந்த உறுப்பினரின் பெயர் எழுதப்படும்.
ரயில் டிக்கெட்டுகளை மாற்றுவது ஒரு முறை மட்டுமே செய்ய முடியும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. அதாவது ஒரு பயணி தனது பயணச்சீட்டை வேறு ஒருவருக்கு மாற்றியிருந்தால், அந்த டிக்கெட்டை பின்னர் வேறு யாருக்கும் மாற்ற முடியாது. எனவே, நீங்கள் ஏற்கனவே ஒருவருக்கு டிக்கெட்டை மாற்றியிருந்தால், இரண்டாவது முறையாக இந்த சேவையை பெற முடியாது.
டிக்கெட் பரிமாற்ற வழிகாட்டுதல்கள் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் டிக்கெட் மாற்றும் கோரிக்கையை எழுப்ப வேண்டும். ஏதேனும் திருவிழா, திருமண நிகழ்வு அல்லது ஏதேனும் தனிப்பட்ட பிரச்சனை இருந்தால், பயணிகள் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக டிக்கெட்டை மாற்றி கொள்ளலாம்.
நீங்கள் டிக்கெட்டை மாற்ற விரும்பும் நபரின் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டையை உங்கள் அருகில் உள்ள ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு கவுண்டருக்கு எடுத்து சென்று டிக்கெட் பரிமாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலமும் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.