நடப்பு 2022-2023ம் ஆண்டில், உயர் கல்விக்காக மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் மூலமாக வழங்கப்படும் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தேதி, அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் வழங்கப்படும் இந்த உதவித் தொகையை எப்படி பெறுவது, யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட விவரங்களைப் பார்க்கலாம்.
உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள்:
- மாநில அளவில் நடக்கும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருத்தல் வேண்டும். இந்த சதவிகிதம் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்ப மாறும்.
- டிப்ளோமா அல்லது தொலைதூர கல்வி மூலம் உயர்கல்வி தொடரக்கூடாது.
- மாணவர்கள் படிக்கும் கல்வி நிலையங்கள், தேசிய அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களாக இருக்க வேண்டும்.
- வேறு எந்த உதவித் தொகையும், அதாவது மாநில அளவிலான உதவித்தொகையை பெறாமல் இருக்க வேண்டும்.
- குடும்ப வருமானம் 4.5 லட்சத்திற்குள்ளாகவே இருக்க வேண்டும். அதற்கான வருமான சான்றிதழை இணைத்திடுவது அவசியம்.
- இந்த உதவித்தொகையை பெறும் மாணவர்கள், தாங்கள் பயிலும் கல்லூரி அல்லது நிறுவனங்களை மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படுவர்.
- மாணவர்கள் தங்களுடைய உதவித்தொகை கோரலை, வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். இதற்கு கல்லூரிகளில் நடக்கும் தேர்வுகளில் குறைந்தது 50% மதிப்பெண்களும், 75% வருகை புரிதலும் அவசியம். கல்லூரியில் எந்த விதமான ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபட்டிருக்கக் கூடாது; அதன் காரணமாக எந்தவிதமான நடவடிக்கையும் அவர்கள் மீது இருக்கக்கூடாது என்பது முக்கியம்.
- புதுப்பித்தலில் தாமதம் ஏற்பட்டால் முற்றிலும் உதவித்தொகை முடிந்துவிடாது; அடுத்ததாக விண்ணப்பிக்கலாம்.
- இளநிலை கல்விக்கு விண்ணப்பித்து உதவித்தொகை பெற்றவர்கள் மட்டுமே முதுகலை பயிலும்போது உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியும்.
உதவி தொகைக்கு தேவையான ஆவணங்கள்:
- மதிப்பெண் சான்றிதழ்
- ஆதார் கார்டு
- Bonafide சான்றிதழ்
- வகுப்பு சான்றிதழ்
- வருமான சான்றிதழ்
- பாஸ்போர்ட் அளவு போட்டோ
விண்ணப்பிக்கும் முறை:
- இந்த உதவித்தொகையை பெற கண்டிப்பாக நீங்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- National Scholarship Portal: https://scholarships.gov.in என்ற வெப்சைட் ஓபன் செய்து கொள்ளவும்.
- திறக்கும் முகப்பு பக்கத்தில், Applicant corner என்று இருக்கும் பகுதியில் New Registration என்ற பகுதியை கிளிக் செய்து உள்ளே செல்லவும்.
- அங்கு இரண்டு பிரிவுகள் காணப்படும். அதில் NSP என்று இருக்கும் பகுதியை தேர்வு செய்யவும். அதன்பின் திறக்கும் பக்கத்தில் Guidelines தரப்பட்டிருக்கும். அவற்றை முழுமையாக படித்துப் பார்த்து, தேவையான ஆவணங்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். கூடவே கீழே இருக்கும் மூன்று Terms and Conditions படித்து `டிக்’ செய்து கொள்ளவும்.
- பின்னர் Register என்ற பகுதியை க்ளிக் செய்து கொள்ளவும். அதனை தொடர்ந்து, விண்ணப்பம் செய்வதற்கான பக்கம் திறக்கும். இங்கு பெயர், முகவரி, வங்கி விவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை கொடுக்கவும். Captcha Code கொடுத்து பின் Register கொடுக்கவும்.
- அடுத்து திறக்கும் பக்கத்தில் Declaration கொடுக்கப்பட்டிருக்கும். அதனை படித்து `டிக்’ செய்து பின்னர் Registration கொடுத்தால், உங்களது தொலைபேசி எண்ணுக்கு Login ID, Password அனுப்பப்பட்டிருக்கும். அதனை குறித்து வைத்துக்கொள்ளவும்.