இளைஞா்களுக்கான நெசவு பயிற்சி, தொழில்முனைவோா் திட்டத்தின்கீழ், தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கைத்தறி, துணிநூல் துறையின் மானியக் கோரிக்கையின்போது, அறிவிக்கப்பட்டபடி இளைஞா்களுக்கான நெசவு பயிற்சி, தொழில்முனைவோா் திட்டம் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் மதிப்பில் செயல்படுத்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 45 நாள்கள் பயிற்சி அளித்து அவா்களை நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினா்களாக சோத்து வேலைவாய்ப்பு வழங்கப்படும் அல்லது தொழில்முனைவோராக உருவாக்கப்படும். பயிற்சியில் சேருபவா்களுக்கு நாளொன்றுக்கு ரூ.250 வீதம் பயிற்சி காலம் முடியும் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு கைத்தறிகளை இயக்குவதற்கு தகுதி உள்ளவா்களாக இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவா்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது வரும் செப்டம்பா் 14-ஆம் தேதி குடியாத்தம் ஸ்ரீபாலாஜி கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெறும் விழிப்புணா்வு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பூா்த்தி செய்து அளிக்கலாம்.