இந்தியாவில் சோதனை அடிப்படையில் இன்று டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த டிஜிட்டல் கரன்சியை ஸ்டேட் பங்க் உள்பட 9 வங்கிகள் இன்று வெளியிட இருக்கின்றன.
மெய்நிகர் நாணயம் என்று சொல்லப்படும் இத்தகைய கிரிப்டோ கரன்சிகள் பயன்பாடு இன்றைய தலைமுறையினர் மத்தியில் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் டிஜிட்டல் பணம் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார். அந்த வகையில், இன்று சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சியை இந்தியாவில் மத்திய அரசு இன்று அறிமுகம் செய்கிறது.
அரசின் பங்கு பத்திரங்களில் பரிமாற்றம் செய்ய இந்த டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்தலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. சோதனை அடிப்படையில் அறிமும் செய்யப்படுவதால் இதன் சக்சஸை வைத்து பிற பரிமாற்றங்களுக்கு டிஜிட்டல் கரன்சி பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, ஹெச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ, கோட்டக் மகிந்திரா, யெஸ்பேங்க், ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி, ஹெச்.எஸ்.பி.சி உள்ளிட்ட 9 வங்கிகள் டிஜிட்டல் கரன்சியை இன்று வெளியிட உள்ளன. டிஜிட்டல் நாணயத்தின் சில்லரை பயன்பாடும் ஒரு மாதத்தில் கொண்டு வரப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட நகரங்களில் அறிமுகம் ஆகும் இந்த கரன்சியை வாடிக்கையாளர்களும், வியாபாரிகளும் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறுகையில், “பண பரிமாற்றத்திற்கு எளிதாகவும்.. வேகமாகவும்.. டிஜிட்டல் நாணயம் இருக்கும். தற்போது வங்கியில் நாம் ரூபாய் நோட்டுக்களை இருப்பு வைத்திருப்பது போலவே டிஜிட்டல் நாணயங்களையும் இருப்பு வைத்துக்கொள்ள முடியும்” என்று தெரிவித்தனர்.
டிஜிட்டல் நாணயங்கள் பெரிதாக வேறுபட்ட ஒன்று அல்ல எனவும் டிஜிட்டல் வடிவில் மட்டுமே என்று தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள், கிரிப்டோ கரன்சிகளை மதிப்பு கூடவோ குறையவோ செய்யாது என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.