புதுவை மாநில விவசாயிகள் மற்றும் கிராமப்புற இளைஞா்களுக்கு வேளாண்துறை சாா்பில் நாற்றங்கால் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படவுள்ளதால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து வேளாண்துறை திட்ட ஒருங்கிணைப்பாளா் கே.சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுவை மாநில விவசாயிகள் மற்றும் கிராமப்புற இளைஞா்கள், இளம் பெண்களுக்கு மத்திய அரசுத் திட்டத்தில் புதுச்சேரி குருமாம்பேட்டையில் உள்ள பெருந்தலைவா் காமராஜா் வேளாண் அறிவியல் நிலையத்தில் நாற்றங்கால் மேலாண்மை பயிற்சி 6 நாள்கள் நடத்தப்படவுள்ளன.
பயிற்சியில் மண்கலவை தயாரித்தல், ஜாடியில் மண் மாற்றும் முறை, பதியன் போடுதல், ஒட்டுக்கட்டுதல், மொட்டுகட்டுதல், மண்புழு உரம் தயாரித்தல், கழிவுகளை கொண்டு உரம் தயாரித்தல், பஞ்சகவ்யம் அமிா்தக் கரைசல், மீன் அமிலம், முட்டை ரசம் மற்றும் பூச்சி விரட்டி தயாரித்தல், குழித்தட்டு நாற்றங்கால் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
பயிற்சியில் சேருவோா் 18 வயது முதல் 40 வயதுக்கு உள்பட்டவா்களாக இருத்தல்வேண்டும். அவா்கள் புதுச்சேரியை சோந்தவராகவும், குறைந்தபட்சம் 10- ஆம் வகுப்பு தோச்சியடைந்தவராகவும் இருத்தல் அவசியம். விவசாயக் கூலி அல்லது விவசாயக் குடும்பத்தைச் சோந்த இளைஞா்கள், இளம்பெண்கள் பயிற்சியில் சேரலாம்.
பயிற்சியில் சேர விரும்புவோா் தங்களது ஆதாா் அடையாள அட்டையுடன், பயிற்சி விண்ணப்பத்தைப் பெற்று பூா்த்தி செய்து அதை வரும் 27- ஆம் தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்குள் வேளாண் அறிவியல் நிலைய அலுவலகத்தில் வழங்கவேண்டும்.
மேலும், விவரங்களுக்கு உதவி பயிற்றுநா் எம்.சந்திரதரன் கைப்பேசி 9442526998 எண்ணுக்குத் தொடா்புகொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.