‘ஆவின்’ கருணை ஓய்வூதியதாரர்கள், ‘டிஜிட்டல்’ முறையில் ஆயுள் சான்று சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆவின் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் தற்போது, 4,713 கருணை ஓய்வூதியதாரர்கள் மற்றும் 1,568 குடும்ப ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.
கருணை ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுள் சான்றிதழை, ஆண்டுதோறும் டிசம்பரில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
ஓய்வூதியதாரர்கள் பலரும் தங்களுடைய உடல்நிலை மற்றும் வயது முதிர்வை கருத்தில் வைத்து, டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழ் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, தேசிய தகவல் மையம் வாயிலாக, கருணை ஓய்வூதியம் பெறுவோர், டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, ‘ஜீவன் பிரமான்’ மற்றும் ‘ஆதார் பேஸ் ஆர்.டி.,’ செயலிகளை தங்களது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து, அதன் வாயிலாக வீட்டில் இருந்தபடியே ஆதார் எண், மொபைல் போன் எண், ஓய்வூதிய கணக்கு விபரம் அடிப்படையில் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்.
இது தவிர, இ – சேவை மையங்கள், தபால் அலுவலகங்கள் அல்லது இதர சேவை வழங்குபவர்கள் வாயிலாகவும், டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம். அனைத்து கருணை ஓய்வூதியதாரர்களும் உடனடியாக, டிஜிட்டல் முறை ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.