கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மத்திய அரசுப் பணி தேர்வுக்கு பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்று ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசுப் பணியாளா் தேர்வாணையம் சாா்பில் 2022 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 17 ஆம் தேதி இறுதிநாளாகும். https://ssc.nic.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அன்று எஸ்.சி., எஸ்.டி. பிரிவினா் 30 வயதுக்குள்ளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 28 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத்திறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினா், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மற்றவா்கள் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். இத்தேர்வினை தமிழ் மொழியில் எழுத அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் மத்திய அரசுப் பணி தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அதன்படி பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது. மத்திய அரசுப் பணி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள இளைஞா்கள் இலவச பயிற்சி வகுப்பை பயன்படுத்திகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.