நீலகிரி மாவட்ட தொழில் மையம் சார்பில், சுய தொழில் கடன் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம், குன்னுார் ஆர்.கே., டிரஸ்ட் பயிற்சி மையத்தில் நடந்தது.கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட தொழில் மைய மேலாளர் சண்முக சிவா பேசுகையில்,”தொழில் முனைவோருக்கு, 5 கோடி ரூபாய் வரையிலும், வியாபாரிகளுக்கு, 5 லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது.
பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், சேவை பிரிவுக்கு, 20 லட்சம், உற்பத்தி தொழிலுக்கு, 50 லட்சம் ரூபாய் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது.”பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் கீழ் ஒரு கோடி ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. உணவு பதப்படுத்துதலில் ஈடுபட்டுள்ள மகளிர் குழுவினருக்கு, 40 ஆயிரம் ரூபாய் வீதம் கடனுதவி வழங்கப்படும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துவங்க மானியத்துடன், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால், மகளிர் மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம்,” என்றார். முன்னதாக ஆர்.கே., டிரஸ்ட் நிறுவனர் லீலா வரவேற்றார். அறங்காவலர் உஷா நன்றி கூறினார்.