”மின் நுகர்வோரை கவனத்தில் கொண்டு ஆதார் எண் இணைப்பு செய்ய வரும், 28 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதுவே இறுதி கால நீட்டிப்பாகும். இனிமேல் கால நீட்டிப்பு வழங்கப்படாது,” என, அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.ஈரோடு வீரப்பன்சத்திரத்தில், கிழக்கு தொகுதி காங்., வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து,மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஓட்டு சேகரித்தார். முன்னதாக, அமைச்சர் செந்தில்பாலாஜி,நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், 2.60 கோடி மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு கணக்குடன், ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இன்னும், 7 லட்சம் மின் இணைப்பு கணக்குகளுக்கு மட்டுமே ஆதார் எண் இணைக்கப்படாமல் உள்ளது.இந்த மின் நுகர்வோரை கவனத்தில் கொண்டு ஆதார் எண் இணைப்பு செய்ய வரும், 28 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதுவே இறுதி கால நீட்டிப்பாகும். இனிமேல் கால நீட்டிப்பு வழங்கப்படாது.கடந்த, 2021 தேர்தல் வாக்குறுதியில் மதுக்கடைகளை குறைப்போம் என தெரிவிக்கவில்லை. இருப்பினும், இந்த ஆட்சியில் இதுவரை, 88 மதுக்கடைகள் அகற்றப்பட்டுள்ளன. தவிர, பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்த இடங்களில் உள்ள கடைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.அ.தி.மு.க.,வினருக்கு ஏற்பட்டுள்ள தேர்தல் தோல்வி அச்சத்தால், தேர்தல் ஆணையத்தில் புகார் செய்து வருகின்றனர்.
தங்களை அடைத்து வைத்துள்ளதாக வாக்காளர்கள் எங்காவது தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளார்களா என பாருங்கள். தி.மு.க., கூட்டணி மூலம் திறக்கப்பட்டுள்ள அனைத்து தேர்தல் அலுவலகங்களும், தேர்தல் ஆணையத்தால் முறையாக அனுமதி பெற்று செயல்படுகின்றன.கைத்தறி, விசைத்தறிக்கான இலவச மின்சார பயன்பாட்டு அளவை உயர்த்த அரசாணை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் அரசு அனுமதி கோரியது. அ.தி.மு.க.,வினர் இந்த அரசாணை வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் கடிதம் வழங்கி உள்ளனர். அதேநேரம் அரசு சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு விளக்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தேர்தல் நடைமுறை முடிந்த பின் அரசாணை வெளியிடப்படும்.தி.மு.க.,வுக்கு மக்கள் ஓட்டுப்போட்டு, 5 ஆண்டு கால ஆட்சியில் திட்டங்களை நிறைவேற்றத்தான் வாய்ப்பு தந்துள்ளனர். ஒன்றரை ஆண்டில், 85 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ளவை விரைவில் நிறைவேற்றப்படும்.தமிழக அரசு, 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மக்களுக்காக மின்சார மானியம் வழங்குகிறது. 2.37 கோடி மின் இணைப்புகளில், ஒரு கோடி மின் இணைப்புகளுக்கு மின் கட்டணம் முழுமையாக இல்லை. அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், 84 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இப்போது, 31 சதவீதம் மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.