ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல விடுதிகளில், தங்கி பயிலும் மாணவர்களின் கல்வி மற்றும் பயிற்சி திறனை வளர்த்து கொள்ள விடுதிகளில் ‘டிஜிட்டல் தகவல் பலகை’ விரைவில் அமலாகிறது என்று தாட்கோ வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கான சுயதொழில் முனைவோர் திட்டத்தில் மானியம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் மானியம், குறு, சிறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் துரித மின் இணைப்பு திட்டத்தில் பயனாளிகளின் பங்குத்தொகை வழங்குதல், ஆதிதிராவிடர் மக்களுக்கு விவசாயத்திற்கு டிராக்டர் வாங்குவதற்கு மானியம் வழங்குதல், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு திட்டம், தொழில் திறன் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தாட்கோ செயல்படுத்தி வருகிறது.
இதன் மூலம் பொதுமக்கள் பல நலன்களை பெறுகின்றனர். மேலும், இந்த திட்டங்களை வலுப்படுத்தும் விதமாக மானியங்களை அதிகரித்தல் மற்றும் கடன் வட்டியை குறைத்தல் போன்ற பல்வேறு விஷயங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக தாட்கோ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்தவகையில், வரும் நடப்பாண்டில் (2023-24) புதிய அறிவிப்புகளை தாட்கோ அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவி தொகை வழங்குதல்: கிராம பகுதிகளில் பயிலும் மாணவர்கள் அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதில் பின் தங்கிய பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் பொருளாதார இல்லாத நிலையினால் முதன்மை தேர்வில் வெற்றி பெற போதுமான பயிற்சி பெற வாய்ப்புகள் குறைவாக உள்ளன. நகர்ப்புறங்களில் தங்கி தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறுவதற்கு 3 மாதங்களுக்கே ரூ.1 லட்சம் வரை ஒரு தனி நபருக்கு செலவாகிறது. இதன் அடிப்படையில், யு.பி.எஸ்.சி மற்றும் டி.என்.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வில் தகுதி பெற்றபின் முதன்மை தேர்வுக்கு பயிற்சி பெற்று தகுதி பெற பயிற்சி கட்டணமாக ரூ.50000 மானியம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இதர தேர்வுகளில் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்விற்கு மாணவர்களை தயார் படுத்த பயிற்சி கட்டணமாக ரூ.25,000 மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளன. இந்த திட்டம் மூலமாக ஒரு மாணவருக்கு மூன்று முறை மட்டுமே மானியம் வழங்கப்படும். ஏதேனும் அரசு பணியில் பணியாற்றிக்கொண்டு போட்டி தேர்விற்கு தயாராகும் நபர்களுக்கும், ஏதேனும், போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேராமல் வேறு தேர்விற்கு முயற்சி செய்யும் மாணவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தாது. அதன்படி, முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுடன் கூடிய போட்டி தேர்வுகளுக்கு மட்டும் பொருந்தும். இந்த திட்டத்திற்காக அரசு மானிய செலவினமாக ரூ. 5கோடி மதிப்பில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மாணவ – மாணவியருக்கு ஆங்கில பயிற்சி வழங்குதல்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கி பயிலும் 68,524 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தங்களது ஆங்கில பேச்சு திறனை வளர்த்துக்கொள்ளும் பொருட்டு ஒரு நபருக்கு ரூ,1,500 வீதம் ரூ.11 கோடி வரை செலவிட்டு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
டிஜிட்டல் தகவல் பலகை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின 1371 விடுதிகளில் தங்கி பயிலும், 68 ஆயிரத்திற்கு மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தவும், எதிர்கால உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த பயிற்சி தொடர்பான தகவல்களை தெரியப்படுத்தவும், இணைய தளம் மூலம் மாணவர்கள் தேர்வை அச்சமின்றி எதிர்க்கொள்ளவும் அறிவுரைகள் வழங்கிடவும், அவர்களின் தேவைகளை நேரிடையாக அரியவும், விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் விடுதிகளில் டிஜிட்டல் தகவல் பலகை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் பொருத்துப்படும் அனைத்து டிஜிட்டல் தகவல் பலகையும், பாட பொருள் மேலாண்மை முறையில் இயக்கப்படும். இதனால் மாணவர்களிடையே தகவல் பரிமாற்றத்தினை எளிதாகவும், விரைவாகவும் செய்ய முடியும். இதற்காக முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் 180 விடுதிகளுக்கு ரூ.1.80 கோடி வரை செலவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதன் மூலமாக அன்றாட உலக தகவல்களை மாணவர்களிடையே விரைந்து கொண்டு சென்று அவர்களின் கல்வி திறனை மேம்படுத்தி தேர்ச்சி விகிதத்தை உயர்த்த தாட்கோ வழிவகுத்துள்ளது.
டிரோன் வாங்க மானியம்:
தற்போது விவசாயிகளுக்கு நிலம் வாங்கும் திட்டம், நில மேம்பாட்டு திட்டம் மற்றும் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயனடையும் வகையில் டிரோன் பயிற்சி அனைத்து மாவட்டத்திலும் அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் பயிற்சிபெறக்கூடிய விவசாயிகளே டிரோன்களை வாங்குவதற்கான மானியத்துடன் கூடிய வங்கிக்கடனை வழங்க தாட்கோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ஒரு டிரோன் விலை ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டு அதில், 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சத்தை தாட்கோ வழங்க முடிவு செய்துள்ளது.
மேலும், இந்த ரூ.5 லட்சம் மானியம் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வங்கி கடனுடன் வழங்க உள்ளது. இந்த டிரோன்கள் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் விவசாய நிலத்தில் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும், நுண்ணூயிர் உரம் தெளித்தல் போன்ற விவசாயம் தொடர்பான தொழிலை மேற்கொள்ளலாம். விளையாட்டு துறையில் சிறந்த மாணவர்களுக்கு மானியம்: கிராமப்பகுதிகளில் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைக்கும் மாணவர்கள் உயர் பயிற்சி பெற பொருளாதார ரீதியில் பின் தங்கி இருப்பதால் அவர்கள் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இயலாமல் போகின்றன.
இந்த நிலையில் போக்கும் விதமாக ஒன்றிய அரசின் மேம்பாட்டு நிதியில், விளையாட்டு திறனில் சிறந்து விளங்கும் கிராமப்புற மாணவர்களுக்கு அதே விளையாட்டில் உயர்பயிற்சி அளிக்கும் உடற்கல்வி பயிற்சி நிறுவனங்களின் வாயிலாக பயிற்சி அளித்து, பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கும், மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு மானியம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தாட்கோ வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதுபோன்ற பல்வேறு புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட திட்டங்களை வரக்கூடிய நடப்பாண்டில் செயல்படுத்த தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.