பிரிட்டிஷ் கவுன்சிலின் ‘ஸ்டெம்’ கல்வி உதவித்தொகையில் முதுநிலைப் பட்டப்படிப்பு பயில விரும்பும் மாணவிகள், மார்ச் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய கல்விஅமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆசிய நாடுகளில் வசிக்கும் பெண்களின் உயர்கல்விக்கு இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பிரிட்டிஷ் கவுன்சில் முக்கியத்துவம் வழங்கி வருகிறது.
அதன்படி, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டும் பிரிட்டிஷ் கவுன்சில் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
அதன்படி இங்கிலாந்தில் உள்ள 19 பல்கலை.களில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் முதுநிலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ள ஏதுவாக உதவித்தொகை தரப்படுகிறது. இதில் கல்விக்கட்டணம், போக்குவரத்து, தங்கும்செலவு, மாதாந்திர உதவித்தொகை மாணவிகளுக்கு கிடைக்கும்.
இந்த ‘ஸ்டெம்’ திட்டத்தின்கீழ் இங்கிலாந்தில் முதுநிலை பட்டப் படிப்பை படிக்க விரும்பும் மாணவிகள் https://www.britishcouncil.org/study-work-abroad/in-uk/scholarship-women-stem என்ற இணையதளம் மூலமாக மார்ச் 31-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் பிரிட்டிஷ் கவுன்சில் நிர்வாகி விஷுசர்மாவை vishu.sharma@britishcouncil.org என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம்.