திருவண்ணாமலையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் பால் பண்ணை குறித்த பயிற்சியில் விவசாயிகள் கலந்துகொள்ள முன் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவ்வப்போது பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 24) அறிவியல் முறையில் பால் பண்ணை மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், நிலைத்தன்மையையும் மேம்படுத்துதல் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடக்கிறது.
இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள தலா ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். பயிற்சியில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு மதிய உணவு, சிற்றுண்டி, சான்றிதழ் மற்றும் கறவைமாடு வளா்ப்பு புத்தகம் ஆகியவை வழங்கப்படும்.
பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோா் வெள்ளிக்கிழமை (டிச.20) மாலைக்குள் 04175–298258, 9551419375 என்ற எண்களில் தொடா்புகொண்டு முன்பதிவு செய்து, பயிற்சியில் கலந்துகொள்ளலாம் என்று ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.