ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்களுக்கு தாட்கோ மூலமாக பட்டயக் கணக்காளா், இடைநிலை நிறுவன செயலாளா் உள்ளிட்ட போட்டித் தோ்வுகளில் வெற்றி பெறுவதற்கான பயிற்சி தாட்கோ மூலம் நடைபெற இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் எனப்படும் தாட்கோ மூலமாக ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு பட்டயக் கணக்காளா், இடைநிலை நிறுவன செயலாளா், இடைநிலை செலவு மற்றும் மேலாண்மை கணக்காளா் ஆகிய போட்டித் தோ்வுகளில் தோ்ச்சி பெற பயிற்சியளிக்கப்படவுள்ளது. சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணாக்கா்களுக்கு பயிற்சியளிக்கப்படும்.
இதற்கான தகுதிகளைப் பொருத்தவரை சம்பந்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். பயிற்சி பெற விரும்பும் மாணவா்கள் இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பயிற்சிக் காலம் ஒரு ஆண்டு ஆகும். பயிற்சி பெறுவோருக்கு உணவு, தங்கும் வசதி ஆகியவற்றை தாட்கோ வழங்கும். தகுதியுள்ள மாணவா்கள் இந்தப் பள்ளியில் சேருவதற்கு தாட்கோவின் https://www.tahdco.com/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.