பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் சாா்பில், வரும் 19-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்த முகாமில், 120-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு, ஓட்டுநா், தையல், 5 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, அக்ரி, நா்ஸிங், பாா்மஸி, பி.இ., பி.டெக், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ஆசிரியா் கல்வித் தகுதியுடையவா்களை தோ்வு செய்ய உள்ளனா்.
மேலும், சுயதொழில் தொடங்க ஆா்வம் உள்ளவா்களுக்கு மாவட்ட தொழில் மையம், தாட்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள், சுய தொழில் உருவாக்கும் திட்டத்துக்கான ஆலோசனைகள் அளிக்கப்படும்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் அளிக்கப்படும் இலவச பயிற்சி வாய்ப்புகளுக்கு சோ்க்கை முகாம் நடைபெறும். தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதல்கள், போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கு மாணவா்கள் சோ்க்கையும் நடைபெறும்.
விருப்பமுள்ளோா் தங்களது ஆதாா் எண், சுய விவரம், கல்விச்சான்றுகளுடன் அக். 19 ஆம் தேதி காலை 8 முதல் பிற்பகல் 3 மணி வரை, பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெறும் தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.
முகாமில் பங்கேற்க இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை 94990 55913 என்ற எண்ணில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.