969 போலீஸ் எஸ்.ஐ தேர்வு – தமிழக காவல்துறை டி.ஜி.பி வெளியிட்ட அறிவிப்பு
சென்னையில் நடக்க இருந்த போலீஸ் எஸ்.ஐ உடற்தகுதி தேர்வு திருச்சிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கடந்தாண்டு 969 நேரடி காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கான எழுத்துத் தேர்வு, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜனவரி மாதத்தில் நடத்தியது.
எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதல் சரிபார்க்கும் பணிகள் கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், தமிழக காவல்துறை டி.ஜி.பி திரிபாதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, உடற்கூறு தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முதற்கட்டமாக திருச்சியில் நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக சென்னையில் இருந்து திருச்சிக்கு இந்த தேர்வுகள் மாற்றப்பட்டுள்ளன. மத்திய மண்டல ஐ.ஜி சிறப்பு சோதனை அதிகாரியாக இருந்து உடற்தகுதி தேர்வை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தேர்வு தேதியை சீருடைப் பணியாளர் வாரியம் அறிவிக்கும் என்றும், போட்டியாளர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.