ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்களைக் கொண்டு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 9-ம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அரசாணையில், “2021 22 ஆம் கல்வி ஆண்டில் கொரோனா பெருந்தொற்றினை கருத்தில் கொண்டு அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை பதிவை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் இணையதளம் வாயிலாக மேற்கொள்ள அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.
பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி மற்றும் மதிப்பின் அடிப்படையில் முதலாம் ஆண்டு பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுவது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த சூழலில் உயர்கல்வித்துறை அமைச்சர் உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்கக அலகு அலுவலர்களுடன் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இதுவரையில் பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பட்டயப் படிப்பில் சேர்வதற்கான கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி என்றிருந்த போதிலும், 2020 – 21 ஆம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு இறுதித் தேர்வு நடத்துவது கொரோனா காரணமாக கைவிடப்பட்டதை தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் பட்டயப் படிப்பு மாணவர்கள் சேர்க்கை செய்து கொள்ளலாம்” என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.