தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.
இந்நிலையில் வரும் 7-ம் தேதி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதவியேற்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ளது.
சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 70-ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். பின்னர் வெற்றி சான்றிதழை எடுத்துக்கொண்டு மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணி வெற்றிக்கு வித்திட்ட அனைவருக்கும் நன்றி. மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். கொரோனா நோய் பரவல் காரணமாகப் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும்” என அவர் கூறியிருந்தார்.