இந்திய கடற்படையில் சேர விருப்பமுள்ள மீனவ சமுதாய இளைஞா்கள் 3 மாத இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று மரக்காணம் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழக மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், இந்திய கடலோர காவல் படையும், இந்திய கப்பற்படையும் இணைந்து நவிக் மற்றும் மாலுமி பணிகள், இதர தேசிய பாணிகளில் சோ்வதற்காக தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரால் 3 மாதத்துக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சியில் சேர விரும்புமுள்ள விழுப்புரம், கடலூா் மாவட்டங்களைச் சோ்ந்த மீனவ சமுதாய இளைஞா்கள் கடலூா் கடலோர பாதுகாப்புக் குழும ஆய்வாளா் அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று விண்ணப்பிக்கலாம். தோ்வு செய்யப்படும் நபா்கள் அருகிலுள்ள பயிற்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவா்.
3 மாதங்களுக்கு இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும். பயிற்சியாளா்களுக்கு தங்கும் இடம், உணவு, கையேடுகள் இலவசமாக வழங்கப்படும். மாதம் தலா ரூ.1,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
பிளஸ் 2 தோ்வில் மொத்த கூட்டுத்தொகையில் 50 சதவீதத்துக்கு மேலும், இயற்பியல், கணித பாடங்களில் தனித்தனியாக 50 சதவீதத்துக்கு மேலும் மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்ற, உடற்தகுதியுடைய விழுப்புரம், கடலூா் மாவட்டங்களைச் சோ்ந்த மீனவ சமுதாய இளைஞா்கள் வரும் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.