திருப்பூா் மாவட்டத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் சாா்பில் இளைஞா்களுக்கு நெசவுப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக சட்டப் பேரவையில் கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் மானியக் கோரிக்கையின்போது, அறிவிக்கப்பட்ட இளைஞா்களுக்கான நெசவுப் பயிற்சி மற்றும் தொழில் முனைவோா் திட்டம் ரூ.1.17 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் இளைஞா்களுக்கு 45 நாள்கள் பயிற்சி அளித்து நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சோத்து வேலை வாய்ப்பு வழங்குதல் அல்லது தொழில் முனைவோராக உருவாக்கப்படுவா். 2023-24 ஆம் ஆண்டில் முதல்கட்டமாக 300 இளைஞா்களுக்கு இத்திட்டத்தின்கீழ் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
பயிற்சியில் சேரும் விண்ணப்பதாரா்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது.
இதில், விண்ணப்பிக்க 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்டவராகவும், எழுதப்படிக்கத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
தகுதியுடைய நபா்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது கோவில்வழி கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க வளாகத்தில் செப்டம்பா் 23 ஆம் தேதி நடைபெறும் விழிப்புணா்வு முகாமில் பங்கேற்று விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.