கொரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 மே 10 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் இரா.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்ற பின் கொரோனா நிவாரண தொகையாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் உள்ளிட்ட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில் முதல் தவணையாக ரூ.2,000 மே மாதத்தில் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 10 ஆம் தேதி முதல் நாள் ஒன்றிற்கு 200 ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி அளிக்கப்படும்.
தினமும் காலை 8மணி முதல் 12மணி வரை இந்த தொகை வழங்கப்படும் என்றும், ஒரு வாரத்தில் இந்த திட்டம் மக்களுக்கு முடிக்கப்படும் எனவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இத்திட்டத்தை மே 10 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.