பொறியியல் படிப்புகளில் 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் நவம்பர் பருவத் தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
ஆட்சிமன்றக் குழுவில் முடிவு
அண்ணா பல்கலை.யின்260-வது ஆட்சிமன்றக் குழு கூட்டம்கடந்த பிப்ரவரி 16-ம் தேதி நடந்தது. இதில், அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு சிறப்பு தேர்வில் பங்கேற்க வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, அரியர் மாணவர்கள் நடப்பு ஆண்டு நவம்பர், டிசம்பர், 2022 ஏப்ரல், மே, நவம்பர்,டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும் பருவத் தேர்வுகளில் பங்கேற்று தேர்வுகளை எழுதிக் கொள்ளலாம்.
அதன்படி 2001-02 (3-ம் பருவம்),2002-03 (முதல் பருவம்) முதல் படித்து அரியர் தேர்வு எழுத (20 ஆண்டுகள்) அவகாசம் முடிந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேர்வு எழுதலாம்.
விருப்பம் உள்ளவர்கள் https://coe1.annauniv.edu என்ற இணையதளம் வழியாக அக்டோபர் 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வழக்கமான தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.5,000 செலுத்த வேண்டும்.
தேர்வுக் கால அட்டவணை உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் அக்டோபர் இறுதிக்குள் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 044-22357267, 22357303, 22357272, 22357307 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.