தமிழக அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசுத்துறையில் உயர் நிலையில் உள்ளவர் முதல் கிளர்க்குகள் வரையிலான பணிகளுக்கு TNPSC சார்பில் குரூப் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். இதற்கிடையில் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நிலவி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக TNPSC குரூப் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படவில்லை.
அதனால் கொரோனாவால் இடைநிறுத்தி வைக்கப்பட்ட குரூப் 2, 2 A மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளை இந்த 2022ம் ஆண்டில் நடத்துவதற்கு TNPSC திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் குரூப் தேர்வுகளுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை சமீபத்தில் வெளியிட்டிருந்த TNPSC தேர்வாணையம், குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதத்திலும், குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்திலும் வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்தது.
அந்த வகையில் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் அதாவது இந்த மாதத்தில் வெளியிடப்பட இருப்பதாக TNPSC தலைவர் கா.பாலச்சந்திரன் தற்போது தகவல் அளித்துள்ளார். இதனுடன் தேர்வுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளதால் இனி TNPSC தேர்வுகள் காலை 9.30 மணி முதல் 12.20 மணி வரையும், 2 மணி முதல் 5 மணி வரையும் நடத்தப்பட உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, 5,831 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 2 தேர்வு நடத்தப்பட இருக்கும் நிலையில் தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.