குறைந்த முதலீட்டில் பெண்களுக்கான நாப்கின் தயாரிப்பதன் மூலம் இல்லத்தரசிகள் கூடுதலாக குடும்பத்துக்கு வருமானம் சேர்ப்பதற்கான வழி ஒன்றுள்ளது.
சுயசுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது நல்ல முன்னேற்றமாக பார்க்கப்படும் வேளையில் உலகளவில் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்தும் பழக்கம் பெண்களிடையே குறிப்பாக கிராம்ம மற்றும் சிறு நகரங்கள் மத்தியில் பெருமளவில் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் சானிட்டரி நாப்கின் தயாரிப்பும் அதன் வர்த்தகமும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தால், சிறுதொழில் பிரிவில் மிகவும் பிரபலமான ஒரு தொழில்வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
குறைந்த முதலீட்டில் ஏதாவது தொழில் செய்யலாம் என்று நினைக்கும் இல்லத்தரசிகளுக்கு இந்தத் தொழில் மிகவும் லாபம் தரக் கூடியதாகவும், எளிதானதாகவும் அமைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் நாப்கின் பயன்பாடு அதிகரித்துவிட்டதால் இதன் உற்பத்திக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
பிஸினஸ் மானிட்டர் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தகவல்படி, இந்திய சந்தையில் சானிட்டரி நாப்கின் தயாரிப்புக்கு பெரியளவிலான டிமாண்ட் இருக்கிறது.
நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் பெண்களிடையே தங்களது மாதவிடாய் பற்றிய சுகாதார விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனால் சானிட்டரி நாப்கின் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது. நியாயமான விலையில் கிடைத்தால் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
மத்திய அரசின் ஸ்வாச் பாரத் அபியான் மற்றும் பேட்டி பச்சாவ் பேட்டி பதாவ் ஆகிய திட்டங்களும் இந்தத் தொழில் விருத்திக்கு மிகவும் உதவுகின்றன.
லைசன்ஸ் மற்றும் பதிவு: இந்தியாவில் சானிட்டரி நாப்கின்களைத் தயாரிக்க பல்வேறு லைசன்ஸ்களும் பதிவுமுறைகளும் தேவைப்படுகின்றன.
இந்திய மருந்துகள் தலைமை கண்ட்ரோலர் (Drug Controller General of India (DCGI) அலுவலகத்தில் இதற்கான லைசன்ஸைப் பெற வேண்டும். இந்திய மார்க்கெட்டில் பார்மாசூட்டிகல் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய இந்த லைசன்ஸ் அவசியம்.
இதற்கான பதிவுச்சான்றிதழைப் பெறுவதற்கு மத்திய மருந்துகள் தர நிர்ணய அமைப்பான Central Drugs Standard Control Organisation (CDSCO)வில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தியாவில் மருந்து உபகரணங்களைத் தயாரித்து விற்கும் நிறுவனங்கள் இந்தச் சான்றிதழைப் பெற வேண்டியது அவசியமாகும். அத்துடன் மத்திய அரசிடம், தொழில் செய்வதற்கான சான்றிதழுக்காக பதிவு செய்தால் அதற்கான குவாலிட்டி சர்டிபிகேட் கிடைக்கும்.
இந்தியாவில் சானிட்டரி நாப்கின்களைத் தயாரிப்பதற்கு என்று தனிப்பட்ட பகுதிகள் தேவை என்ற கட்டுப்பாடுகள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
நாப்கின்களில் கிருமித் தொற்று எதுவும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் உற்பத்தி இடம் சுகாதாரமாகவும் காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும். அத்துடன் தயாரிக்கும் தொழிற்கூடத்தில் உபகரணங்களையும், தயாரிப்புகளை சேமிக்கும் அளவுக்கு தாராளமான இடவசதியும் இருந்தால் போதும்.
சானிட்டரி நாப்கின்களைத் தயாரிப்பதற்கான செலவுகள் பல்வேறு அம்சங்கள் காரணமாக மாறுபடலாம். உற்பத்தியளவைப் பொருத்தும் வித்தியாசப்படலாம். பொதுவாக ரூ.2 லட்சம் இருந்தால் போதும் இந்தத் தொழிலை சிறப்பாகத் தொடங்கிவிடலாம்.
லாபத்துக்கும் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் 70 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை லாபமாக ஈட்டலாம். இதில் லாபம் என்பது நாம் செய்யும் மார்கெட்டிங், வர்த்தக அளவு, உற்பத்தி விலைக்கும் விற்பனை விலைக்கும் மத்தியில் இருக்கும் மார்ஜின் ஆகியவற்றின் அடிப்படையில் அமையும். இதோல் மொத்த விலை விற்பனை மற்றும் ரீடைல் விற்பனைக்கும் லாப அளவுகள் மாறுப்படும்.